நாகப்பட்டினம், பிப்.28: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக 33 மற்றும் 33 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக (ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 எக்டேருக்கு மட்டும்) ரூ.17 ஆயிரம் வீதம் 5 ஆயிரத்து 728 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடியே 68 லட்சத்து 29 ஆயிரத்து 838 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வரப்பெற்றுள்ளது.
இந்த நிதியை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு வார காலத்திற்குள் வரவு வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.