தஞ்சாவூர், ஜூன் 10: பட்டா வழங்க கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சொக்கநாதபுரம் பூவானம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சொக்கநாதபுரம் பூவானம் கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகள் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது:
எங்கள் ஊரை சேர்ந்த சுமார் 40 நபர்களுக்கு கடந்த 1959ம் ஆண்டு வழங்கப்பட்ட இடத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு அன்று முதல் இதுநாள் வரைக்கும் பட்டா வழங்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.