இடைப்பாடி, ஆக.24: சதுர்த்தி விழா விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக, பூலாம்பட்டி காவிரி கரையில் நேற்று எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார். சதுர்த்தி விழாவையொட்டி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். குறிப்பாக சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைத்துச் செல்வர். சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில், பூலாம்பட்டி காவிரி கரையில் நேற்று எஸ்.பி., கவுதம் கோயல் நேரில் ஆய்வு செய்தார். பூலாம்பட்டி சந்தை திடல், கல்வடங்கம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பார்வையிட்டார். ஆய்வின்போது சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இடைப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் உடனிருந்தனர்.