Thursday, December 12, 2024
Home » பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்?!

பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்புத்தாண்டு நேரத்தில் ஓர் எதிர்மறையான விஷயத்தைச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், வேறு வழியில்லை; சென்டிமென்ட் பார்ப்பதற்கான அவகாசமும் இப்போது இல்லை. உலகம் அழியப் போகிறது என்ற வதந்திகள் அவ்வப்போது பரவி அடங்குவது வழக்கம்தான். ஆனால், இனி அவையெல்லாமே வதந்திகளாக மட்டுமே இருக்கப் போவதில்லை. இயற்கையால் உருவாகி, இயற்கையை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் கொண்டதுதான் எல்லா உயிரினங்களும். மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒத்திசைவு கொண்ட வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மனித இனம் மட்டும் தன்னுடைய அகம்பாவத்தாலும் அறியாமையாலும் பூமி என்கிற தன் வாழ்விடத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கி இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வந்துவிட்டிருக்கிறது. இதற்கான அபாய அலாரங்கள் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தோனேஷியாவில்தானே கடல் கொந்தளிக்கிறது என்று இனி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாகத்தான் 2004-ம் ஆண்டு தமிழகம் சுனாமியை சந்தித்தது. தற்போது கஜா புயலின் கோரத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறோம். தமிழக மக்களால் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்குப் பருவமழை பொய்த்து, மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான விதையை விதைத்திருக்கிறது. இந்த காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் தெற்காசிய பகுதியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் கிழக்கு அங்க்லியாவின் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளர் ஆயுஷி அவஸ்தி.‘மோசமாகப் பாதிக்கப்படும் பல நாடுகளில், இந்தியாவும் ஒன்று.;அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள் மற்றும் மக்கள் இடம் பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின் தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக்கூடும்’ என்று கூறியிருக்கிற ஆயுஷி, இதுபற்றி விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். ‘காலநிலை மாற்றத்தால் இந்தியா பேரழிவை சந்திக்கக்கூடும். இந்தியா நீண்ட கடற்கரை உள்ள நாடு. கடல்மட்டம் உயரும் பட்சத்தில் இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மற்றொரு பக்கத்தில், கடுமையான வெப்பக்காற்றும் வீசக்கூடும். 2015-ம் ஆண்டில் வீசிய வெப்பக்காற்றால் ஒரு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர். விரைவில், அதுபோன்ற காற்று தினசரி வீசத் தொடங்கலாம்’ என்று மிரட்டுகிறது அந்த அறிக்கை.2015-லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தனது இலக்குகளை அடைவதற்கு தற்போதைய இந்திய ரூபாயில் 70 லட்சம் கோடிக்குமேல் செலவாகும் என்று இந்தியா கணக்கிட்டுள்ளது. இந்த செலவினங்களை வைத்தே, இந்த பிரச்னையின் தீவிரத்தை நாம் உணர முடியும்.ஐ.பி.சி.சி.யின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, பருவநிலை மாற்றத்தால் தமக்குரிய பங்கைவிட கூடுதலான சுமையை தாங்கள் தாங்கவேண்டியிருக்கும்’ என தன் தரப்பு கருத்தை தெரிவித்திருந்தது. இருந்தாலும் புவி வெப்பமயமாவதை குறைக்க, கார்பன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் தற்போது இந்தியா இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அதிகரிக்கும் தண்ணீர் பற்றாற்குறை, வறட்சி, வெள்ளம், புயல் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளுக்கும் இந்தியா தயாராக வேண்டும். அடுத்து என்ன என்பதே இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வியாக இருக்கிறது.இந்தியாவில் அதிகமான போக்குவரத்து தேவை உள்ளது. இதனால், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றம் ஏற்படலாம். இந்தியாவில் சைக்கிள்களும், ரிக்‌ஷாக்களும் அதிக அளவில் இருந்த நிலை மாறி, தற்போது, தனிநபர் வருமாத்தை அதிகரிக்க, பலரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு மாறி வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த இந்தியா மின்சக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் மெட்ரோ ரயில், பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நீடித்த நிலைத்த போக்குவரத்து முறைக்கு வழிசெய்ய வேண்டும். 2050ம் ஆண்டிற்குள் கார்பன் வெளியாவதை பெருமளவு குறைக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னவாகும்?1.5 செல்சியஸுக்கு கீழ் புவியின் வெப்பத்தை குறைக்க நாம் தவறிவிட்டால், சில அபாயகரமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். 2 டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்தால், கடல் நீரின் வெப்பம் அதிகரித்து, பவளப் பாறைகள் இல்லாமல் போய்விடும். அதே போல, 2 டிகிரிக்கு மேல் புவி வெப்பமாகும்போது, கடல் நீர்மட்டம் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உயரும். இதனால் கடலுக்கருகில் மக்கள் வாழுமிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும். கடலின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மையின் மாற்றம் ஏற்பட்டு, நெல், சோளம் மற்றும் கோதுமைப் பயிர்கள் வளர்வதில் தாக்கம் ஏற்படும்.வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக்கானவர்கள் உணவுப் பஞ்சத்தில் சாக நேரிடலாம். இதையெல்லாம் அரசாங்கத்தின் கவலை என்று நினைக்காமல், சாமான்யனாக நாம் என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். வெப்பத்தை குறைக்க என்ன முயற்சிகளை எடுக்கலாம்?இதற்கும் ஒரு வரைவு திட்டத்தை கூறுகின்றனர் வல்லுனர்கள். ஏராளமான பொது அறிவு செயல் திட்டங்கள் இருப்பதாக அரசாங்கங்களுக்கிடையேயான குழு ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் முதன்மையானவரான அரோமர் ரெவி கூறுகிறார். சாமானியர்கள் மற்றும் நுகர்வோர்கள்தான் உலகம் வெப்பமயமாவதை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கப் போகிறார்கள் என்று சொல்லும் இவர், தினசரி வாழ்க்கையில் நம்மால் செய்ய முடிந்த சில விஷயங்களையும் கூறுகிறார்.பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. நகரங்களில் நம் போக்குவரத்தை நாம் முடிவு செய்ய முடியும். கூடியவரை நேரடியாகச் செல்லும் உங்களது வணிகப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, காணொளி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்துங்கள்.மின்சாரத்தை சேமியுங்கள்இரண்டாவது மிக முக்கியமான விஷயம் ஆற்றலை சேமிப்பது. அதாவது இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்ற நேரங்களில் மின்விசிறி, ஏ.சி பயன்பாடு தொடங்கி, வாஷிங் மிஷின் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள். இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும். அடுத்த முறை மின்சாதன பொருட்களை வாங்க செல்லும் போது, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் மின்சாதனப் பொருட்களாக பார்த்து வாங்குங்கள். அடுத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுங்கள். தண்ணீர் சூடேற்றும் சாதனம் முதல் உங்கள் மொபைல் சார்ஜர் வரை சூரிய ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம்.மறு பயன்பாடுபொருட்கள் நுகர்வை குறைத்துக் கொள்வது மற்றும் பொருட்களை தூக்கி எறியாமல் கூடுமானவரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும். எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு துணிப்பை வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதனால் பிளாஸ்டிக் பைகள் சேர்வதை குறைக்க முடியும். இது தண்ணீருக்கும் பொருந்தும். பலநாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன படகு, கட்டிடங்களை வடிவமைக்கத் தொடங்கிவிட்டார்கள். சொல்லிக் கொடுங்கள்தகவலை பெறும் வசதி இருப்பவர்களால், பருவநிலை மாற்றம் குறித்தான செய்திகளை தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால், இது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த விஷயத்தை கொண்டு சேருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இதைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நாளைய தலைமுறைக்கு இந்த பூமி மிச்சம் இருக்க வேண்டுமென்று நினைத்தால் நாம் இதனை செய்ய வேண்டும். ‘இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்னையை எதிர்க்கொள்ளுங்கள். நம் கையில் இருப்பது வெறும் 12 ஆண்டுகள் மட்டுமே’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே, பல நாடுகள் இந்த அறிவுரைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கிவிட்டன. நாம் எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்? நாளைய தலைமுறை மோசமான பிரச்னையை எதிர்கொள்ள நாம் செய்யும் தவறுகள் காரணமாக அமைந்துவிட வேண்டாம்.

You may also like

Leave a Comment

eleven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi