திருப்புத்தூர், அக்.14: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நாளை நவராத்திரி விழா துவங்குகிறது. திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயிலின் பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டு அதில் விதவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் நாளான நாளை உற்சவ அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலையில் லட்சார்ச்சனை துவங்குகிறது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.
1ம் திருநாள் முதல் 10ம் திருநாள் வரை தினந்தோறும் மாலையில் லட்சார்ச்சனை நடைபெறும். 2ம் நாளான நாளை மறுநாள் பூமாயி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், 3ம் நாளன்று தையல் நாயகி அலங்காரத்திலும், 4ம் நாள் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்திலும், 5ம் நாள் தட்சிணாமூர்த்தி அலங்காரத்திலும், 6ம் நாள் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருவார். 7ம் நாள் பள்ளி கொண்ட பெருமாள் திருக்கோலத்தில் காட்சியளிப்பார்.
8ம் நாள் மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். 9ம் நாள் சிவபூஜை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். 10ம் நாளான அக்.24ம் தேதி இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். பின்னர் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மதியம் 12 மணியளவில் திருமுகன் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாக்குவினர் செய்து வருகின்றனர்.