போரூர், ஜூன் 5: பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் தடத்தில் நாளை 3ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு சென்னை மெட்ேரா ரயில் சார்பில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கின்றன.
இப்பணிகளை வரும் 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீட்டர் நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நாளை பூந்தமல்லி போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீட்டருக்கு, 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இருமார்க்கத்திலும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.