திருவள்ளூர், செப். 21: கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் பகுதிகளை திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சி ராயல் கார்டன், அரி நகர், நேமிநாத் நகர், சென்னீர்குப்பம் ஊராட்சி மற்றும் நசரத்பேட்டை ஊராட்சி, யமுனா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் தாழ்வான பகுதிகளில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆய்வு செய்தார். பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுகபுத்திரா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காந்திமதி நாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி சங்கர், காட்டுப்பாக்கம் கௌதமன், கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நசரத்பேட்டை திவ்யா பொன்முருகன், காட்டுப்பாக்கம் ஷீலா சரவணன், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், சித்ரா துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தாழ்வான, வெள்ளம் சூழும் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.