பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, சாலை விபத்தில் நர்ஸ் பரிதாபமாக பலியானார். ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் உமாதேவி(33). இவர் தன்னை ஆன்லைன் மூலம் அழைப்பவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அங்கு வயதானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே திருமுடிவாக்கத்தில் ஒரு மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துவிட்டு, மொபெட்டில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நெமிலிச்சேரி சுங்கச்சாவடி அருகே இவர் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபெட், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில் நர்ஸ் உமாதேவி நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அதேநேரம் பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி உமாதேவியின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். தகவலறிந்தது, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான நர்ஸ் உமாதேவியின் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான 2 லாரி டிரைவர்களையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.