ஊட்டி, ஜூலை 6: ஊட்டி- மஞ்சூர் சாலையோரத்தில் பூத்துகுலுங்கும் எவர்லாஸ்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலும் அவ்வப்போது சில மலர்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக, குறிஞ்சி மலர்கள், ஜெகரண்டா, சேவல் கொண்டை மலர்கள், டேலியா, பிளேம் ஆப்தி பாரஸ்ட் போன்ற மலர்கள் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றார்போல் பூக்கும். இது சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக்களையும் கவரும்.
அந்த வகையில், ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்கள், சாலையோரங்களில் தற்போது மஞ்சள் நிறத்தில் எவர் லாஸ்ட் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த மலர்கள் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இதனால், இதற்கு காகித பூக்கள் என்ற பெயரும் உண்டு. இந்த எவர்லாஸ்ட் மலர்களை பறித்துவந்து பெரும்பாலான பெண்கள் சுற்றுலா தலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் கைகாட்டி, காந்திப்பேட்டை, 6வது மைல், பாலகொலா, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளிலும் இந்த மலர்கள் தற்போது அதிகளவு பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.