தஞ்சாவூர், செப். 20: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட உதவி மையங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் அரங்கத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். அட்டைகள், மகளிர் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல் கையேடு, காகிதப்பை ஆகியவை வழங்கப்பட்டன.
இத்திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்ட அலுவலகங்களில் 13 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையங்களை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விண்ணப்பதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.