பூதப்பாண்டி, மே 19: பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு என அந்த ஊரில் 2 வழிபாட்டு தலங்களும் உள்ளது. எனினும் இந்த ஊர் மக்களுக்கான கல்லறை தோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது.
அதற்கு அவர்கள் செல்லும் பாதை வயல்களின் மட்டத்திலேயே அமைந்துள்ளது. எனவே மழை காலம் மற்றும் விவசாய காலங்களில் இந்த பாதை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் இவர்களுக்கு பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது. இது குறித்து இப்பகுதி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை இல்லை.கடந்த சில நாட்களுக்கு முன் கலுங்கடி பகுதியில் முதியவர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் சேறும் சகதியுமான பாதை வழியே நடந்தது. எனவே இந்த கல்லறைதோட்டம் செல்லும் வழி பாதையை சீர் செய்து கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.