வடலூர், ஆக. 14: பூட்டிய வீட்டிற்குள் எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கொத்தவாச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கல்வராயன் மகன் சிவக்குமார்(45). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்தார். இவர் அதே தெருவில் உள்ள இவரது அண்ணன் அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவது வழக்கம். இவரது தாய் அரிகிருஷ்ணன் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிவக்குமார் அரிகிருஷ்ணன் வீட்டிற்கு சாப்பிட வரவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அரிகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள், அவரது நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்குதேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் நேற்று காலை அவர் வசித்த வீட்டிற்கு சென்று பூட்டிய வீட்டை உடைத்து பார்த்தபோது சிவக்குமார் உடல் எரிந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரிகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து, சிவக்குமாரை யாராவது எரித்து கொலை செய்தார்களா அல்லது அவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.