திருவண்ணாமலை, ஆக.28: திருவண்ணாமலையில் பூட்டிய துணி கடைக்குள் மகள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், விடிய விடிய கடை வாசலில் பெற்றோர் பரிதவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர், திருவண்ணாமலை தேரடி வீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள ஒரு துணி கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் ேபால துணி கடைக்கு வேலைக்கு சென்ற இளம்பெண், வேலை முடிந்ததும் இரவு வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி வரை வீடு திரும்பாததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் செல்போன் இல்லாதால் தொடர்பு கொள்ள வழியில்லை.
எனவே, மகளுடன் வேலைக்கு செல்லும் பெண்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, ‘வேலை முடிந்து வெளியே வந்த பிறகு, டிபன் பாக்ஸ் மறந்து வைத்துவிட்டதாக கடைக்குள் மீண்டும் சென்றார். அதன் பிறகு நாங்கள் பார்க்கவில்லை’ என தெரிவித்தார்களாம். அதனால், பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியிருக்கலாம் என பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். எனவே, நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் உள்ள துணி கடைக்கு வந்தனர். அங்கிருந்த செக்யூரிட்டி மூலம், உரிமையாளரை தொடர்பு கொண்டு கடையை திறந்து பார்க்க முயற்சித்துள்ளனர். ஆனால், கடையை திறக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, இரவு முழுவதும் விடிய விடிய கடை முன்பு பெற்றோர் பரிதவிப்புடன் காத்திருந்தனர். நேற்று காலை கண்ணீருடன் பெற்றோர் காத்திருப்பது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், வழக்கமாக கடை திறக்கப்படும் காலை 8.30 மணிக்கே, கடையின் மேலாளர் உள்ளிட்டோர் வந்தனர். போலீசார் முன்னிலையில் துணிக்கடையை திறந்து பார்த்தனர். கடையின் அனைத்து தளங்களிலும் தேடினர். ஆனாலும், இளம்பெண் கடையில் இல்லை. ேமலும், சிசிடிவி காட்சியை பார்வையிட்டபோது, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணி முடிந்து இளம்பெண் வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருப்பதாக கடை நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இளம்பெண் எங்கு சென்றார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை காணாமல் விடிய விடிய துணி கடை முன்பு கண்ணீருடன் பெற்றோர் பரிதவித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.