திருவண்ணாமலை, ஜூன் 19: திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலில், ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் விற்பனை அங்காடியை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த கணொலி காட்சி நிகழ்ச்சியின் மூலம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் ரூ.217.98 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, மாநிலம் முழுவதும் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.43.50 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பூஜைப் பொருட்கள் மற்றும் மலர்கள் விற்பனை அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய அங்காடியில் மொத்தம் ஏழு கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதையொட்டி திருவண்ணாமலையில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, ஆர்டிஓ ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.