பெரணமல்லூர், ஜூலை 18: பெரணமல்லூர் விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்கினால், நெற்பயிரை பூச்சிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் வரப்புகளில் விதைக்க 4 கிலோ உளுந்து இலவசமாக வழங்கப்படுகிறது என்று வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரணமல்லூர் வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜன் கூறியதாவது: தற்போது ஆடி பட்டம் துவங்கியுள்ள நிலையில் இந்த பட்டத்திற்கு ஏற்ற விதை நெல் ரகங்களை விவசாயிகள் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டால் லாபம் அடையலாம். குறிப்பாக இந்த பட்டத்தில் வெள்ளை ரக பொன்னி விதை நெல்களை வாங்கினால் மிகவும் லாபகரமாக இருக்கும். தற்போது வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான மேம்படுத்தப்பட்ட வெள்ளை ரக பொன்னி விதை நெல் கோயம்புத்தூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் அரசு மானிய விலையில் இரண்டு மூட்டை விதை நெல் வாங்கினால் ₹600 மதிப்புள்ள 4 கிலோ விதை உளுந்து இலவசமாக வழங்கப்படும். மேலும் விதை உளுந்தை விவசாயிகள் வரப்பு ஓரங்களில் விதைத்து பூச்சிகள் தாக்குதலில் இருந்து நெல்பயிரை காப்பாற்றி அதிக மகசூல் மற்றும் லாபம் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.