ஓசூர், அக்.26: ஓசூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் பூ மார்க்கெட்டில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பூக்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், திடீரென நேற்று முன்தினம் விலை குறைந்தது. இந்த மார்க்கெட்டிற்கு மதுரை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரிலிருந்து தினமும் 10 முதல் 12 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் கிலோ ₹220க்கு விற்ற சாமந்திப்பூ நேற்று முன்தினம் ₹80க்கும், ₹1,200க்கு விற்ற கனகாம்பரம் ₹700க்கும், ₹1,100க்கு விற்ற குண்டு மல்லி ₹800க்கும், முல்லைப் பூ ₹800லிருந்து ₹400க்கும், கோழிக்கொண்டை பூ ₹300லிருந்து ₹80க்கும், ஒயிட் ரோஸ் ₹250லிருந்து ₹120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த 3 நாட்களாக பூக்களின் விலை உயர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் பூக்களின் விலை குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியடைந்ததால், சாலையோரத்தில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்,’ என்றனர்.