பெரம்பலூர்,மே.19: பெரம்பலூர் புது பஸ்டாண்டு தென்புறமுள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நேற்று(18ம் தேதி) புரட்சித் தமிழகம் கட்சி சார்பில் வாழ்வுரிமை அரசியல் மாநாடு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கூட்டம் நடந்த ஹோட்டல் அருகே வைக்கப் பட்டிருந்த பேனர்களையும், அக்கட்சியின் கொடிகளையும் கிழித்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து, அந்த ஹோட்டல் மீது கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தியதன்பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கடந்த சில வாரங்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை அவதூறாக பேசி வருவதைக் கண்டித்தும், கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.தாக்குதல் காரணமாக தனியார் ஹோட்டல் கதவுகள் உள் புறமாக பூட்டிக்கொண்டு புரட்சித் தமிழகம் கட்சியினர் கூட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் புது பஸ்டாண்ட் தென்புறம் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.