புவனகிரி, ஜூன் 19: புவனகிரி அருகே மருதூரில் ரூ.3.50 கோடியில் வள்ளலார் அவதரித்த இல்லம் புதிதாக கட்டும் பணியை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் ராமலிங்க சுவாமி பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் ஆகும். இந்த கிராமத்தில் அவரது அவதார இல்லம் உள்ளது. இந்த அவதார இல்லத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழுதடைந்த நிலையில் இருந்த வள்ளலார் அவதார இல்லத்தை புதிதாக கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து புதிய இல்லம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை நேற்று காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி தலைமையில், திருஅருட்பா அகவல் பாராயணம் பாடப்பட்டு, சிறப்பு வழிபாட்டுடன் பூமிபூஜை நடந்தது. இதில் திமுக முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர்கள் மனோகரன், வெற்றிவேல், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் அழகானந்தன், வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கிஷோர், ராமலு, கனகசபை, கனகலட்சுமி மற்றும் சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.