புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எதிரே சென்னை நோக்கி செல்லும் திசையில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை, மின்விளக்கு, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் ஆகியவை இல்லாததால் புழல் பகுதியில் இருந்து சென்னை மூலக்கடை, பெரம்பூர், சர்மா நகர், வியாசர்பாடி, வள்ளலார் நகர், பாரிமுனை, தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பேருந்துக்காக கால் கடக்க நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இங்கு உள்ள மரத்தடி கீழே நின்று காத்திருந்து பயணிக்கின்ற அவல நிலை உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வழிப்பறியும், பாலியல் தொல்லைகளும் சில நேரம் நடக்கிறது. மழைக்காலங்களில் சிரமப்பட்டு பேருந்தில் பயணிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாதவரம் மாநகர போக்குவரத்து கழகத்தினரும், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிழற்குடை அமைத்து மின்விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.