புழல், ஜூன் 20: மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் இரண்டு பக்கங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக பேருந்து நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் மழை, வெயில் காலங்களில் சிரமப்பட்டு பேருந்தில் சென்று வருகின்றனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகும் கதிர்வேடு பகுதி பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபுவை நேரில் சந்தித்து, கதிர்வேடு பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் செலவில் புழல் நோக்கிச் செல்லும் கதிர்வேடு பேருந்து நிறுத்தத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் பங்கேற்று, புதிய பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார். பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, கதிர்வேடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு கேக் வெட்டி, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர் சிதம்பரம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருவேற்காடு லயன் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் கதிர்வேடு பாபு, மாதவரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் புழல் குபேந்திரன், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், வட்டார தலைவர்கள் மாதவரம் வெங்கடேசன், நித்தியானந்தம், புழல் சர்க்கில் காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், மாநில வழக்கறிஞர் அணி பிரிவு பொதுச் செயலாளர் கோட்டூர் உதயா, புழல் பிரபு, 31வது வார்டு திமுக நிர்வாகிகள், பொன் சதீஷ்குமார், எம்ஜிஆர் நகர் சரவணன், விஜயசந்தர் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.