புழல், மே 28: மாதவரம் மண்டலம், 24வது வார்டு புழல் அண்ணா நினைவு நகரில் குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர் என புழல் அண்ணா நினைவு நகர் பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் சேட்டுவை நேரில் சந்தித்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் அவரது வார்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கவுன்சிலர் சேட்டு தலைமை தாங்கி கட்டிடத்தை அங்கன்வாடி குழந்தைகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் 24வது வார்டு உதவி பொறியாளர் கமலக்கண்ணன், அங்கன்வாடி மைய அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.