லால்குடி, ஜூன் 30: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் மெஞ்ஞானவிநாயகர், நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, முதல் காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை கடம் புறப்பாடு செய்து 10 மணியளவில் ஆலயங்களின் அனைத்து விமான கலசத்திற்கும், பின்னர் கருவறை மூலஸ்தானத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அனைவருக்கும் தீபாராதனையுடன் பிரசாதமும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி ரவிச்சந்திரன், ஸ்தபதி செல்வகுமார், கிராம மற்றும் சுற்றுவட்டார முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கு பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பட்டையதாரர்கள், திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.