பந்தலூர், நவ.19: பந்தலூர் அருகே புளியம்பாறை அட்டிக்கொல்லி பகுதிக்கு செல்லும் நடைபாதை சேதமாகி குண்டும் குழியுமா இருப்பதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட புளியம்பாறை அருகே அட்டிக்கொல்லி பகுதியில் பழங்குடியினர் மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு செல்வதற்கு கடந்த பல வருடங்களுக்கு முன் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. அந்த நடைபாதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சாலையானது பழுதடைந்து தற்போது குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. அதனால் கிராம மக்கள் நடந்து செல்வதற்கு கூட பயனில்லாமல் உள்ளது.
அவசர தேவைகளுக்கு ஆட்டோ உள்ளிட்ட எந்தவிதமான வாகனங்களும் சென்று வரமுடியாமல் இருப்பதால் பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சியை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி குண்டும் குழியுமாக உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.