குடியாத்தம், செப்.1: குடியாத்தம்- பலமனேரி நெடுஞ்சாலையில் புலி செல்வதாக வைரலான பழைய வீடியோவை இணையத்தில் பரப்ப வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். தமிழக- ஆந்திர மாநிலத்தை ஒட்டிய சைனகுண்டா சோதனை சாவடியில் இருந்து, ஆந்திர மாநிலம் பலமனேர் சொல்ல சுமார் 15 கிலோமீட்டர் வனப்பகுதி சாலையில் செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இதை பலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 தினங்களாக குடியாத்தம்- பலமனேரி செல்லும் சாலையில், புலி ஒன்று உறுமிக் கொண்டு சாலையை கடந்து செல்லும் வீடியோ குடியாத்தம் பகுதியில் சமூக வலைத்தலங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனால் குடியாத்தத்தில் இருந்து பலமனேருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குடியாத்தம் பகுதியில் வைரலாகும் வீடியோ, பழைய வீடியோ. அந்த இடம் குடியாத்தம்- பலமநேரி சாலை இல்லை, இதுபோல் தவறான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம். மீறி பகிரப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.