Monday, May 29, 2023
Home » புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by kannappan

சென்னை: “வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள்.  சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது.  இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் பேசிய வடமாநிலத்துப் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது. ”வாய் பேச முடியாத தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாகச் செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்’ என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது. தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். வர்த்தகத்திற்காக – தொழிலுக்காக- மருத்துவத்துக்காக – கல்விக்காக – வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்கு வருவது அதிகரித்து வருகிறது. சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்வது தான் இதற்குக் காரணம்.  தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.கொரோனா இரண்டாவது அலையின் போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல விரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னைப் பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன்.   அதேபோல், குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கு, பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக (1.4.2021) முதல் இதுவரை ரூபாய் 6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் அவர்கள் பணிபுரியும் போது, பாதுகாப்பாகப் பணிபுரியவும், விபத்துக்களைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.  அவர்களது எண்ணம் ஈடேறாது.  இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும்.  அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கின்றது. வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.  எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பீகார் மாநில முதலமைச்சர், எனது பெருமதிப்பிற்குரிய சகோதரர் நிதிஷ்குமார் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi