நன்றி குங்குமம் டாக்டர் Proton therapyஉலகை அச்சுறுத்துவதாக புற்றுநோய் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக புதிய சிகிச்சைகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் புரோட்டான் தெரபி என்ற சிகிச்சை பற்றி சமீபகாலமாக அதிகம் கேள்விப்படுகிறோம். இந்த புரோட்டான் தெரபி என்பது என்னவென்று கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் சுமனா பிரேம்குமாரிடம் கேட்டோம்…புரோட்டான் தெரபி என்பது என்ன?‘‘அணுவுக்குள் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் அடங்கியிருக்கின்றன என்று படித்திருப்போம். இவற்றில் புரோட்டானை அடிப்படையாக வைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையே Proton therapy.; அதாவது அணுக்களில் உள்ள புரோட்டான் என்கிற துகள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு வகை கதிர்வீச்சு சிகிச்சை இது. மற்ற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையைப் போல புரோட்டான் தெரபியும் வெளிப்புறமாகக் கொடுக்கக்கூடியதே. இதனால் இதை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை முறை (External Radiation Beam Therapy) என்றும் சொல்லலாம். தற்போது நவீன முறையில் கொடுக்கக்கூடிய ஒருவகை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சைமுறைதான் இந்த புரோட்டான் தெரபி.’’இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…‘‘ஒரு செல் அல்லது அணுவின் நடுவில் உள்ள பகுதியை நியூக்ளியஸ் என்கிறோம். அதில் புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் உள்ளன. நியூக்ளியஸைச் சுற்றி எலக்ட்ரான் என்கிற துகள்கள் உள்ளன. இதில் புரோட்டானுக்கு பாசிட்டிவ் எனர்ஜியும், எலக்ட்ரானுக்கு நெகட்டிவ் எனர்ஜியும் உள்ளது. நியூட்ரானுக்கு எவ்வித எனர்ஜியும் இருப்பதில்லை. இதில் பாசிட்டிவ் எனர்ஜியுடைய புரோட்டான், நெகட்டிவ் எனர்ஜியுடைய எலக்ட்ரானை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. தற்போது இந்த புரோட்டான்களை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது?‘‘Cyclotron என்கிற ஒரு எந்திரம் மூலமாக புரோட்டான்களுக்கு தேவையான சக்தியும், வேகமும் கொடுத்து உடலுக்குள் செலுத்தும்போது, அது எந்தப் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த ஆழத்திற்கு செலுத்தி புரோட்டான் தெரபி கொடுக்கப்படுகிறது. இதில் புரோட்டான் துகள்களை உடலுக்குள் அதிகபட்சம் 32 செ.மீ. ஆழம் வரை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சையில் புரோட்டான்களை உடல் உறுப்புகளுக்குள் செலுத்தும்போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.புரோட்டான்கள் உடலுக்குள் செல்லும்போது, அது ஆங்காங்கே உடனடியாக தன் சக்தியை வெளிப்படுத்துவதில்லை. நிதானமாகவே அதன் சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் எந்த பகுதிக்குள் சென்று அதன் சக்தி வெளிப்பட வேண்டுமென்று நிர்ணயித்து அனுப்புகிறோமோ அந்த இடத்திற்கு உள்ளேயே அதன் முழு வீரியமும் வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களைச் சுற்றியுள்ள நல்ல செல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.மேலும் உள்ளே செலுத்தும்போதும் வெளியே வரும்போதும் பாதிப்புகள் இருக்காது. ஆனால், பிற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சைகளில், கதிர்வீச்சினை உள்ளே செலுத்தும்போது பாதிப்புகள் இருக்கும். அது உடலைவிட்டு வெளியே வரும்போதும் ஒருசில குறைவான பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த புரோட்டான் தெரபியை புறநோயாளியாக, வீட்டிலிருந்துகொண்டு சென்றே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சிகிச்சையை நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலைகளைப் பொறுத்து ஒரு சிட்டிங் முதல் 16 சிட்டிங் வரை தேவைக்கு ஏற்ப மருத்துவரே பரிந்துரை செய்வார்.’’புரோட்டான் தெரபியின் பயன்கள்…‘‘புரோட்டான் தெரபி மூலம் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம். குறிப்பாக மூளையிலுள்ள புற்று கட்டிகள், கழுத்து தண்டுவடத்திலுள்ள புற்று கட்டிகள், ப்ராஸ்டேட் சுரப்பியிலுள்ள புற்று கட்டிகள் போன்றவற்றிற்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். சிறுநீர்ப்பைக்குக் கீழ் இந்த ப்ராஸ்ட்டேட் சுரப்பி உள்ளது. இதிலுள்ள பிரச்னைகளைக் குறைப்பதோடு, கதிர்வீச்சினையும் 60 சதவிகிதம் வரையிலும் குறைக்க முடியும். இதன்மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் பெரியளவில் குறைக்க முடியும்.தலை, கழுத்து, வாய், உமிழ்நீர் மற்றும் கண் சார்ந்த புற்றுநோய்களுக்கு இந்த சிகிச்சைமுறை பயனுடையதாக; இருக்கிறது. கண்ணிலுள்ள புற்றுகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கையில், கண் பார்வையின் தரத்தை 96 சதவிகிதம் வரை; பாதுகாக்க முடியும். கழுத்து மற்றும் வாய் பகுதிகளில் புரோட்டான்களைக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பதால் விழுங்குதல், ருசியை உணர்தல் போன்ற பிரச்னைகள் குறைவாக இருக்கும். மண்ணீரல், கல்லீரல் மற்றும் நுரையீரல் சார்ந்த புற்றுநோய்களுக்கும் இந்த சிகிச்சைமுறை உதவியாக இருக்கிறது.மேலும் குழந்தைகளுக்கு தலை, மூளை, தண்டுவடம், இதயம் போன்ற உறுப்புகளில் உள்ள புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கும் இந்த சிகிச்சைமுறை பெரும் உதவியாக இருக்கும். புதிதாக அறிமுகமாகி, பிரபலமாகி வரும் இந்த சிகிச்சைமுறை தற்போது ஆரம்ப நிலையில் இருப்பதால், இதிலுள்ள பிரச்னைகள் மற்றும் பயன்கள் குறித்து உடனடியாக நாம் ஒரு முடிவிற்கு வர முடியாது. எனவே, இன்னும் அதிகமானோருக்கு இச்சிகிச்சையை பயன்படுத்திய பிறகே இதுகுறித்து நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.’’– க.கதிரவன்
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
previous post