செங்கம், செப்.4: செங்கம் அருகே காரப்பட்டு கிராமத்தில் புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. செங்கம் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(27). இவர் கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியில் சேர்ந்து, தற்போது சென்னையில் பணியாற்றி வந்தார். காவலர் வெங்கடேஷ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனால் அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வெங்கடேஷின் உடல் சொந்த ஊரான காரப்பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிறப்பு படையின் காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மலர் வளையம் வெங்கடேஷ் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் 21 குண்டுகள் முழங்க வெங்கடேஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.