தஞ்சாவூர், ஜூன் 4: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இதனால் மூலவர் மாரியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 5 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 18ம் தேதி புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டது. இதையடுத்து அனுக்னஞ, விக்னேஸ்வர பூஜை, தேவதானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹவசனம், வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஜபஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மூலஸ்தான மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை, மாலை தைலக்காப்பும், சகஸ்ரநாம் அர்ச்சனையும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யா ஹவசனம், பூர்வாங்க கிரியைகள், பூர்ணாஹூதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, முதல்கால யாக பூஜை தொடங்க உள்ளது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து, நேற்று (செவ்வாய்கிழமை) காலை 2ம் கால யாக பூஜையும், மாலையில் 3ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. பின்னர், இன்று காலை 4ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து யாத்திர தானம், கடம் புறப்பாடு நடைபெற்று. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இதனையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அத்துடன் தைலகாப்பு அபிஷேகம் நிகழ்ச்சி முடிவடைகிறது.