அவிநாசி, ஜூன் 7: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவி பெரும் பள்ளி) விழுதுகள் அமைப்பு சார்பில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி புஷ்பலதா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழுதுகள் அமைப்பு திட்ட மேலாளர் சந்திரா மற்றும் குளோரி ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில், பிளாஸ்டிக் மாசுபாடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்து மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.