சமயபுரம், செப்.5: திருச்சியில் 3வது புத்தக கண்காட்சி தமிழக அரசின் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சி செப். 27 இல் தொடங்கி அக் 6 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக 2022ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.2.50 கோடிக்கும், 2ஆவது ஆண்டாக 2023ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.3.5 கோடிக்கும் புத்தகங்கள் விற்பனையாயின. தற்போது 2024 ம் ஆண்டில் 3வது ஆண்டாக புத்தகத் திருவிழாவை செப்.27 தொடங்கி அக்.6 வரை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார் தலைமையில் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் இருந்து பள்ளி மாணவிகள் புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து தொடங்கி எதுமலை திருச்சி சாலை வழியாக எல்.எப் ரோடு வழியாக வந்து மீண்டும் பள்ளியை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசெல்வன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.