புதுச்சேரி, செப். 11: புதுவையில் எதிரியை மிரட்ட வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பரிசோதித்த ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரம் மேற்கு பகுதி ஆரம்ப பகுதியில் நள்ளிரவு பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதைக் கேட்ட பொதுமக்கள் வீடுகளில் இருந்து பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அப்பகுதியை கரும்புகை சூழ்ந்து காணப்படவே அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயும் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது தெரியவந்தது. அந்த இடத்தில் பேப்பர், கண்ணாடி துகள்கள், ஆணிகள், கூழாங்கற்கள் சிதறிக் கிடப்பது தெரிய வந்தது. அவற்றை சேகரித்த போலீசார், அதை வீசிய நபர் யார்? என்பதை கண்டறியும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கினர். வெடிகுண்டு வெடித்தபோது அப்பகுதியில் நின்றிருந்த ஒருநபர் குறித்த சில அடையாளங்களை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகத்தின்பேரில் அந்தநபரை பிடித்து தனிப்படை அதிரடியாக விசாரணை நடத்தியது.
விசாரணையில் அவர், அரியாங்குப்பம், மணவெளி, பெரியார் நகரைச் சேர்ந்த ரவிகாந்த் ஜான்மரி என்ற பரத் (19) என்பதும், தற்போது புதுசாரம், கவிக்குயில் நகர், 5வது குறுக்குத் தெருவில் வசிப்பதும் தெரியவந்தது. ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய இளம் குற்றவாளியான இவருக்கும், வாணரப் பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
தனது எதிராளியை மிரட்டுவதற்காக பரத் முதன்முதலாக தானே சொந்தமாக கூழாங்கற்கள், நூல், வெடிமருந்து உள்ளிட்டவற்றை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வீசி வெடிக்கச் செய்து பரிசோதித்து பார்த்ததும் அம்பலமானது. இதையடுத்து பரத் மீது வெடிகுண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை உடனே கைது செய்தனர். நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்து, நூல்கண்டு, கூழாங்கற்கள், ஆணிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பரத்தை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.