புதுச்சேரி, ஆக. 1: புதுவையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளான முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிக்கட்சி தலைவர் சிவா மற்றும் 3 எம்எல்ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை பெரியகடை போலீசார் பாதியிலேயே தடுத்து கைது செய்தனர்.
புதுவையில் பெரியமார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். நேருவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இக்கட்சியினர் பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அவர்களை தலைமை தபால் நிலையம் அருகே கிழக்கு எஸ்பி சுவாதிசிங் தலைமையில் பெரியகடை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டு இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்ததால், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ்,முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.