புதுச்சேரி, ஜூன் 10: புதுச்சேரியில் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடைகாலம் துவங்கியது. இந்தாண்டு முதன் முறையாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி 100.4 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து, கத்திரி வெயில் துவங்கிய முதல் நாளான மே 4ம் தேதி 100.6 டிகிரியும், 12ம் தேதி 102.6 டிகிரியும் பதிவானது. அதன்பிறகு, தென் மேற்கு பருவமழை துவங்கியதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் கத்திரி முடியும் வரை வெயின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது. 1ம் தேதி 101.5 டிகிரி வெயில் பதிவான நிலையில் தினமும் அனல் காற்றுடன் சராசரியாக 99 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 7ம் தேதி 100.8 டிகிரியும், நேற்று முன்தினம் நடப்பாண்டிலேயே புதிய உச்சமாக 104 டிகிரியும் வெயில் பதிவானது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆக வெயில் சுட்டெரித்தது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசியதால் முதியோர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று முன்தினம் இரவு லேசாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். புதுச்சேரியில் நடப்பாண்டு 7 முறை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதில் 4 முறை ஜூன் மாதத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.