புதுச்சேரி, ஆக. 29: புதுவையில் மின் கட்டண உயர்வு திடீரென அமலுக்கு வந்தது. ஜூன் 16ம் தேதி முதல் மின் கட்டண பாக்கி வசூலிக்கப்படுகிறது. புதுவையிலும் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டு புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி மின்துறை முடிவு செய்தது. இதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை மற்றும் மின்திறல் குழுமம் விண்ணப்பம் தாக்கல் செய்தது. இதையடுத்து, புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடந்தது. இதில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால் மின் கட்டணம் உயர்த்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவு வெளியிட்டது. ஆனால் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை நிறுத்தி வைப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்தது. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டண உயர்வு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மாதம் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 1 முதல் 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அது ரூ.1.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர சேவை கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டு வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.25 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3.25ல் இருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.40ல் இருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.80ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் குறைந்தபட்சம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கு நிரந்தர சேவை கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டில் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு ரூ.5.60ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான நிரந்தர சேவை கட்டணம் ரூ.420ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகளை பொருத்தவரை ஒரு மின் கம்பத்துக்கு மாதாந்திர நிரந்தர கட்டணமாக ரூ.110 என்றும், ஒரு யூனிட்டுக்கு ரூ.7.10 என்றும் பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களில் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.