புதுச்சேரி, மே 24: புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) ஸ்டிக்கர் மணி (24). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் கோவிந்தசாலையைச் சேர்ந்த லோகபிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் லோகபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், மணிகண்டனை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம் தீட்டினர். ஆனால், மணிகண்டன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். இதையடுத்து பெரியகடை போலீசார் லோகபிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், லோகபிரகாஷை கொலை செய்ய, மணிகண்டனும், அவரது கூட்டாளிகளும் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியுடன் ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு மணிகண்டன் முன் ஜாமீன் பெற்று, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். மேலும், மணிகண்டன் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக மணிகண்டன் மற்றும் சந்திகுப்பத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் முருங்கப்பாக்கம்-வில்லியனூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பெரியார் நகரை சேர்ந்த தனுஷ், பாவாணர் நகரை சேர்ந்த சஞ்சை மற்றும் மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து தாக்க முயன்றனர். உடனே சுதாரித்து கொண்டு இருவரும் வாகனத்தை கீழே போட்டுவிட்டு, ஒவ்வொரு திசையில் தப்பி சென்றனர். இதனிடையே கொம்பாக்கம் பேட் மாதா கோயில் வழியாக மணிகண்டன் தப்பி செல்லும் போது, அப்பகுதியில் மறைந்த இருந்த கோவிந்தசாலையைச் சேர்ந்த குட்டி சந்துரு, பாவாணர் நகரை சேர்ந்த சுனில் ஆகியோர் மணிகண்டனை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அவர்களிடம் இருந்து தப்பித்து வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக தப்பி சென்றுவிட்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து மணிகண்டன் அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டன், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.