திருபுவனை, அக். 17: திருபுவனையில் புதுவீட்டில் குடியேறிய கடலூரைச் சேர்ந்த இளம்பெண் மாயமான நிலையில், புதுச்சேரி, திருபுவனை, சீனிவாசன் நகரில் வசிப்பவர் நிலவழகன் (30). இவர் வில்லியனூரில் உள்ள கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி பவித்ரா (26). 2019ல் இத்தம்பதிக்கு திருமணமான நிலையில் இதுவரை குழந்தை இல்லை. இதனிடையே கடந்த ஒரு மாதமாக புதிய வீட்டுக்கு இத்தம்பதி குடிபெயர்ந்த நிலையில், அவ்வப்போது கோபித்துக் கொண்டு கடலூர், காரைக்காடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு பவித்ரா சென்று விடுவாராம். அவரை சமாதானப்படுத்தி நிலவழகன் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம்தேதி நிலவழகன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மாயமானார்.
மதியம் சாப்பிட வீடு திரும்பிய நிலவழகன், தனது மனைவிக்கு போன் செய்தபோது, பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறவே, தனது மாமனார், மாமியாரை தொடர்பு கொண்டு அவரிடம் இத்தகவலை தெரிவித்தபோது, கடலூருக்கு பவித்ரா வரவில்லை என கூறவே அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது மனைவியை பலஇடங்களில் தேடி அலைந்து ஏமாற்றமடைந்த நிலவழகன் நேற்று திருபுவனை போலீசில் முறையிட்டார். அதன்பேரில் எஸ்ஐ ராஜசேகர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். அவரது செல்போன் சுவிட்ச்ஆப்பில் உள்ளதால் யாராவது பவித்ராவை கடத்திச் சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.