சேலம், செப்.2: சேலம்-இரும்பாலை ரோட்டில் நெரிசலை குறைக்கும் வகையில், புதுரோடு சந்திப்பில் ₹4.50 கோடியில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம்-இரும்பாலை மெயின்ரோட்டில் உள்ள புதுரோடு சந்திப்பில் இருந்து, முத்துநாயக்கன்பட்டி மற்றும் பழைய சூரமங்கலம் செல்ல இணைப்பு சாலை உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து, அப்பகுதியில் சாலையை மேம்படுத்தி ரவுண்டானா அமைக்க, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், சாலைபாதுகாப்பு நிதியில் ₹4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்மூலம் புதுரோடு சந்திப்பில் சாலையை விரிவாக்கம் செய்து, சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், புதுரோடு சாலை சந்திப்பில் புதிதாக ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சேலம் கண்காணிப்புப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். ஆய்வின் போது உதவிக் கோட்டப் பொறியாளர் சந்தோஷ்குமார் மற்றும் உதவிப் பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர்
உடனிருந்தனர்.