பரமக்குடி, ஜூலை 29: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசின் புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம் அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் சமூக நலத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்(பொ) கணேசன், ஆங்கிலத்துறை துறைத் தலைவர் ரேணுகா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு சமூக நலத்துறை அலுவலர் விளக்கம் அளித்தார். இறுதியில் கல்லூரி புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.