பெரம்பலூர், மே 21: பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 11 ம்தேதி பூச்சொரிதல் உற்சவமும், 13 ம்தேதி குடியழைத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 18 ம்தேதி முருகன் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊர்வலம், மாரியம்மனுக்கு பால் அபிசேகமும், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 19 ம்தேதி மாலை அக்னி மிதித்தல், அலகுக் குத்துதல், அக்கினிச் சட்டி ஏந்தி வலம் வருதல் நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (20ஆம்தேதி) செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார், பின்னர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மண்ணச்ச நல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மணி, பூபதி, நிதி அலுவலர் ராஜசேகர், புதுநடுவலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி நீலராஜ்,
முன்னால் துணைத் தலைவர் செந்தில், கிராம முக்கிய பிரமுகர்கள், பெரம்பலூர், அரணாரை, வெள்ளனூர், நொச்சியம், விளாமுத்தூர் உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பிராய. சித்த வழிபாடு நடத்தப்பட்டது. இன்று புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.