புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நடுரோட்டில் போதையில் ரகளை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் ஐடிஐ ரோடு பெட்ரோல் பங்க் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் திலாசுப்பேட்டையை சேர்ந்த குமார் (37) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், வில்லியனூர் உறுவையாறு அமுதசுரபி மதுபார் பின்புறம் போதையில் ரகளை செய்த உறுவையாறு பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (20) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். திருக்கனூர் கேஆர்.பாளையம் புளியந்தோப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சிறுவள்ளிகுப்பத்தை சேர்ந்த ராமு (53) என்பவரை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர்.
லிங்காரெட்டிப்பாளையம் சுகர் மில் எதிரே மெயின் ரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த விழுப்புரம் மாவட்டம் வானூர் வி.காளியாபட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை காட்டேரிகுப்பம் போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் கூடப்பாக்கம் மெயின் ரோட்டில் போதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த சக்தி என்ற சுப்பிரமணி (31) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். மடுகரை சிறுவந்தாடு சந்திப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக போதையில் ரகளை செய்த விழுப்புரம் தாத்தம்பாளையம் பிரவீன்ராஜ் (21), சந்தோஷ்குமார் (23) ஆகிய 2 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.