புதுச்சேரி, ஆக. 31: புதுச்சேரியில் கடந்த 2014ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணைக்காக, புதுச்சேரி நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் ஆஜரானார். புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தலித் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு எதிராக அவர் பேசியதாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் மதியழகன் என்பவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி ஆஜராகினார். அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு விண்ணப்பம் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இக்கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று ஏங்கி கிடக்கும் சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். எங்கள் உரிமை தொடர்பாக நாங்கள் எழுப்புகிற குரல் வேறு. கூட்டணி தொடர்பாக நாங்கள் கொண்டுள்ள நிலைபாடு வேறு. ஆகவே, இந்த வதந்திகள் திமுக கூட்டணி ஒற்றுமையை எந்த வகையிலும் பாதிக்காது.
சென்னையில் விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இதுபோன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் தலைநகர் சென்னையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திருக்க ஒரு வாய்ப்பாக அமையும். அதே சமயம், தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு இழுக்கவும் ஏதுவாக அமையும். வளரும் பெரு நகரங்களாக பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்துவதன் மூலம்தான் அந்த நகரங்களில் தொழில் முதலீடுகள் பெருகுகின்றன. புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியதை வரவேற்கிறோம். அதனை வலியுறுத்துவோம். என்றார். அப்போதுரவிக்குமார் எம்பி, புதுச்சேரி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.