ரெட்டிச்சாவடி, ஜூன் 4: புதுச்சேரி எல்லைப் பகுதியான முன்ளோடையில் இரண்டு நாட்களுக்கு முன் கொலை நடந்த இடத்தின் அருகே சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் நேற்று அதிகாலை 3 கடைகளை உடைத்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியின் எல்லைப் பகுதியான கடலூர் மாவட்டம் முள்ளோடை அருகே சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மெயின் ரோட்டில் டீக்கடை மற்றும் இரும்பு கடை உள்ளது. இதன் அருகில் சுவீட் ஸ்டால் புதிதாக அமைக்கப்பட்டு ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளதால் இனிப்பு, காரவகைகள் செய்வதற்காக மளிகை பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சுவீட் கடையின் பின்பக்கமாக தகர கூரையை உடைத்து உள்ளே புகுந்து மளிகை பொருட்களை மூட்டையோடு திருடிச் சென்று விட்டனர். அருகில் இருந்த டீ கடையிலும் கேஸ் அடுப்பு, குளிர்பானங்கள், 3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். மேலும் இரும்புக்கடை மாடியில் உள்ள கடைக்குள்ளும் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. நேற்று காலை வழக்கம் போல கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டீ கடையில் 20க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்களை உடைத்து அங்கேயே குடித்துள்ளனர். பிஸ்கட்களையும் சாப்பிட்டு விட்டு ஏராளமான பிஸ்கட், குளிர்பான பாட்டில்களையும் திருடி சென்றுள்ளனர். கொள்ளை போன பணம், பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவலின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் கிடைத்த சிசி டிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் மூன்று வாலிபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் அவர்கள் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வினோத் (25), ராஜேந்திரன் (20), சுள்ளியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உச்சிமேடு புத்துக்கோயில் அருகே பதுங்கியிருந்த 3 வாலிபர்களை ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இண்டக்ஷன் ஸ்டவ் மற்றும் டிரில்லிங் மெஷினுக்கு தேவையான உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் எந்தெந்த பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.