புதுச்சேரி, ஜூன் 28: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கினார். இதையடுத்து அவருக்கு பதிலாக அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஜான்குமார் புதிய அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் பாஜக கட்சியை சேர்ந்த சாய் சரவணன்குமார் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார். மேலும் காலியாக உள்ள அமைச்சர் பதவியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாருக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜினமா கடிதம் வழங்குவதற்கு முன்பு தனது அமைச்சர் அறையில் மனைவியுடன் வந்து சாமிகும்பிட்ட சாய் சரவணன்குமார் பின்னர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். முன்னதாக சாய் சரவணன்குமார் அமைச்சர் பதவி ராஜினாமா குறித்து கூறுகையில், ‘பாஜகவில் இணைந்து ஊசுடு தொகுதியில் பல ஆண்டுகளாக மக்களை சந்தித்த எனக்கு அவர்களது நம்பிக்கையுடன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தனர்.
பிரதமர் மோடி இதே நாளில் (ஜூன் 27ம்தேதி) அமைச்சராக்கி என்னை அழகுபார்த்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பிரதமர் என்னிடம் கூறியிருக்கிறார். அவரது தலையாய உத்தரவை ஏற்று ராஜினாமா செய்ய முதல்வரை சந்திக்க செல்கிறேன்’ என்றார். இதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, பிரதமர்தான் எனக்கு பதவி கொடுத்தார். இது அவரது உத்தரவு என தொிவித்தார்.