புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட சாகர் கவாச் ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் சாதாரண உடையணிந்து ஊடுருவ முயன்ற 5 பேரை போலீசார் பிடித்தனர்.நாடு முழுவதும் கடலோர மாவட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அரசு கட்டிடங்கள், கலங்கரை விளக்கம், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் சாகர் கவாச் என்கிற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 2 நாள் நடைபெற்றது.
இதேபோல் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 24ம் தேதி சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையில் சீனியர் எஸ்.பி. (சட்டம் ஒழுங்கு) கலைவாணன், கடலோர காவல்படை எஸ்.பி. பழனிவேல் மற்றும் போலீசார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். மேலும், புதுச்சேரி மீனவ கிராமங்களான கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பூரணாங்குப்பம், நல்லவாடு, மூர்த்திகுப்பம் உள்ளிட்ட கரையோர மீனவ கிராமங்களில் சோதனை நடந்தது. மேலும் மக்கள் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம், மார்க்கெட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சியில் காவலர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்களாக நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் ஊடுருவ முயன்ற 5 பேரை போலீசார் பிடித்தனர். கடந்த 24ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சி நேற்றிரவு 8 மணியுடன் நிறைவு அடைந்தது.