புதுச்சேரி, ஜூலை 10: கல்லூரியை விற்பதாக கூறி தனியார் தொழிற்சாலை ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கேரள நபர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (52). கல் மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அவருடன், நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ராமலிங்கம் (52) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர், கணேசனிடம் காரைக்காலில் ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி விற்பனைக்கு வருவதாகவும், அதனை வாங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம் எனவும், கல்லூரிக்கு சம்பந்தப்பட்டவர்கள் தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கான ஆவணத்தையும் ராமலிங்கம் காண்பித்ததாக தெரிகிறது. இதனை நம்பிய கணேசன் மற்றும் சக நண்பர்கள் 4 பேரும் கடந்த 2019 முதல் பல்வேறு தவணைகளில் ராமலிங்கம் மூலமாக நாகர்கோவில் ஆண்டாள்குளத்தை சேர்ந்த குமரேசன் (45), கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (46) ஆகியோருக்கு பணத்தை அனுப்பியுள்ளனர். இதுபோல் மொத்தம் ரூ.35 லட்சம் யுபிஐ மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் கூறியபடி கல்லூரியின் உரிமத்தில் பங்குதாரராக சேர்க்காமல் 3 பேரும் காலம் கடத்தி வந்துள்ளனர்.
அதன்பிறகே, போலி ஆவணத்தை காண்பித்து தங்களை அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து கணேசன், நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் குமரேசன், சந்தோஷ்குமார், ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி பிரிவின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.