புதுச்சேரி, ஜூன் 25: புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு தக்காளிகளை வீசி பணி நீக்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீதும் தக்காளி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 2016ல் தேர்தல் நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். சில மாதங்களில் தேர்தல் கமிஷன் மற்றும் ஐகோர்ட் உத்தரவின்பேரில் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள், மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டக் குழுவை உருவாக்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கி, சம்பளமாக மாதம் ரூ.10,500 வழங்கப்படும் என 2023 மற்றும் 2025 சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரையிலும் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் பணிநீக்க ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் நேற்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென பொதுப்பணித்துறை அலுவலகம் மீது சிலர் தக்காளிகளை சரமாரியாக வீசினர். இதில் ஒருசில தக்காளிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்க ஊழியர்கள் 19 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து கைது செய்து வேனில் ஏற்றி கரிக்குடோனுக்கு கொண்டு சென்றனர். பின்னர் பொதுப்பணித்துறை ஊழியர்கள் வீசப்பட்டு கிடந்த தக்காளிகளை அப்புறப்படுத்தி வளாகத்தை சுத்தப்படுத்தினர்.
அரசு அலுவலகம் மீது தக்காளி வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.