புதுச்சேரி, ஜூன் 19: புதுச்சேரியில் கொத்தனார் வீட்டில் ரூ.5.27லட்சம் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். புதுச்சேரி பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (40), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் கணபதிக்கு உதவியாக அவருடன் வேலை செய்து வந்தார். மேலும் கணபதியுடன் அவரது தந்தை ஆறுமுகம் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கணபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முதல் மாடியில் உள்ள கதவை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.
பின்னர், வேலை முடிந்து தம்பதி இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளனர். பின்னர் கணபதி முதல் மாடிக்கு சென்ற போது அலமாரி திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அலமாரியை பார்த்துபோது, அதிலிருந்த 2 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி மற்றும் ரொக்க பணம் ரூ.3.32 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5.27 லட்சமாகும். வயது முதிர்ந்த கணபதியின் தந்தை ஆறுமுகம் மட்டுமே வீட்டில் இருப்பதை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கணபதி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை நிபுணர்களை வரழைத்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.