விராலிமலை, செப்.20: தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வருமானத்தை மேலும் உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை 2022-23 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் வகைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விராலிமலை வட்டார விவசாய நிலங்களுக்கு நடப்பு சம்பா பருவத்துக்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் தங்கச் சம்பா, சீரகச் சம்பா,தூயமல்லி. ஆகிய ரகங்களின் விதைகள் 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் விராலிமலை மற்றும் நீர்பழனியில் விநியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டு, தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தேவை உடைய விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளை பெற்று அதிக மகசூல் அடைந்து பயனடைந்திடலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.