புதுக்கோட்டை, மார்ச் 8: புதுக்கோட்டை மாவட்டம் வருவாய்த் துறை அலுவலர்களிடம் புதிய வாகனங்களின் சாவிகளை கலெக்டர் அருணா வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கிய புதிய வாகனங்களின் சாவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா,நேற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர் பேசிய போது, தமிழ்நாடு முதல்வர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில், வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்கிறது. சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதல்வர் தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை வழங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கிய புதிய வாகனங்களின் சாவிகளை இன்றையதினம் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. எனவே, இந்த புதிய வாகனங்களை தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்ல முறையில் பராமரித்து, பாதுகாப்பான முறையில் பயணம் செய்து, மக்கள் நலத்திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்ராஜராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.