புதுக்கோட்டை, ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2023-24ம் வருட தேசிய உணவு எண்ணெய் இயக்க திட்டத்தின் கீழ் விதைப்பண்ணை அமைத்து ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25வீதம் 410 குவிண்டாலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட எண்ணெய் வித்து பயிர் ரகங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று சான்று விதை உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்து பயிர் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.25 வீதம் 729 குவிண்டால் விதைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய்வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று நிலை எண்ணெய்வித்து விதைகள் கிலோவுக்கு ரூ.40வீதம், 278 குவிண்டால் விதைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. வீரிய ஒட்டு எண்ணெய்வித்து விதைகள் மற்றும் எள் விதைகள், கிலோவுக்கு ரூ.80 வீதம் 12 குவிண்டாலுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 15 வருடங்களுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டுமே, இந்த மானிய உதவிகள் வழங்கப்படும்.
மேலும், எண்ணெய்வித்து பயிரில் தொகுப்பு செயல் விளக்கம் அமைத்திட எக்டேருக்கு ரூ.10,000 வீதம், நிலக்கடலை பயிர் விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் ரக விதைகள் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டு 300 எக்டர் பரப்புக்கு செயல் விளக்கம் அமைத்திட, நிலக்கடலை விவசாயிகள் பயன் பெறுவர். இத்திட்டத்தில், எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம் வாங்கி, சாகுபடிக்கு பயன்படுத்துகின்ற விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.750 பின்னேற்பு மானியமாக மொத்தம் 1110 எக்டேருக்கு வழங்கப்படும். திரவ உயிர் உரங்கள், எக்டேருக்கு ரூ.300 மானியத்தில் 1110 எக்டேருக்கு விநியோகம் செய்யப்படும்.
நிலக்கடலை விவசாயிகளுக்கு நிலக்கடலை நுண் சத்து, எக்டேருக்கு 12.5கிலோ எண்ணும் அளவில் அடியுரமாக இட எக்டக்கு ரூ.500 மானியத்தில் 1130 எக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெற்று பயன் பெறுவர். எண்ணெய்வித்து சாகுபடி, பயிர்களில் தோன்றும் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்த எக்டேருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா விர்டி (அல்லது) எக்டேருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், மொத்தம் 1110 எக்டேருக்கு ரூ.500 மானியத்தில் விநியோகிக்கப்படும். நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்ய எக்டேருக்கு 4 கிலோ வீதம் பயறு விதைகளும், அங்கக் திரவ உரம், எக்டேருக்கு 1.5 லிட்டர் வீதமும், எக்டேருக்கு ரூ.1000 மானியத்தில் 370 எக்டேருக்கு வழங்கப்படும்.
எண்ணெய்வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறுவடை மற்றும் அறுவடை பின் செய் நேர்த்தி செலவினத்திற்கும், எக்டேருக்கு ரூ.2500 வீதம், 382 எக்டேருக்கு பின்னேற்வு மானியம் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம், எண்ணெய் வித்து சாகுபடிக்கு சிறப்பு மண்டலமாக தேர்வு செய்யப்பட்டு எண்ணெய் வித்து சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், எண்ணெய் வித்து உற்பத்தியனை அதிகரிக்கவும், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய உணவு எண்ணெய் இயக்கத் திட்டத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 6 இலட்சத்து 66,000 ரூபாய்க்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்யம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட விவசாயிகள் தேசிய உணவு எண்ணெய் இயக்கத் திட்ட மானிய உதவிகளை பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, கேட்டுக்கொள்கிறார்.